காலப்பயணம் சாத்தியமா ?

எல்லோரும் பல வகை பயணங்கள் செல்வதுண்டு,ஆனால் காலப்பயணம் (Time Travel) என்று சொன்னால் பலருக்கு அதில் ஒரு ஆசை, சுவாரஷ்யம், விறுவிறுப்பு தொற்றிக்கொள்ளும் . காரணம் மனிதனின் ஆழ்மனதிலுள்ள ஆசைகள் , படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் . ஒருவர் எதிர் காலத்திற்கும் , கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திலிருந்தே சென்று வரலாம் அல்லது நேரத்தை உறைய வைக்கலாம் பல நாட்கள் இளமையாக வாழலாம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது ?

பொதுவாக காலப்பயணம் தொடர்பான கருத்துக்கள் பிரபலமானது 1895 ஆம் ஆண்டு H.G.வெல்ஸ் என்பவர் எழுதிய ‘கால இயந்திரம்’ என்ற நூலினூடாக, எனினும் அறிவியல் புனைக்கதைகளில் இன்று வரையிலும் ஒரு பிரசித்தி பெற்ற (Concept) கருத்தாகவே இது இருந்து வருகிறது .இது உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமா என்று கேட்டால் முடியும் என்கிறது அறிவியல்.

ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் ஒளியின் வேகம் சார்பற்றது.வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் ஒரு செக்கனுக்கு 29,97,92, 458 மீட்டர்.
ஆக 29,97,92,458 ஐ அறுபதால் பெருக்கி வரும் விடையை மீண்டும் அறுபதால் பெருக்கினால் வரும் விடை ஒளியின் ஒரு மணித்தியால வேகம் அப்படிதானே ? முயற்சி செய்யாதீர்கள் தலை சுற்றி விடும். சும்மா நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .
நாம் இதுவரை அறிந்த பிரபஞ்சத்தில் இதைவிட மிஞ்சிய வேகம் என்று எதுவுமில்லை.அனால் இதை விட வேகமாக செல்லக்கூடிய ஒரு வாகனத்தை கண்டுபிடித்தால் காலப்பயணம் சாத்தியமாகலாம் என்கிறது பௌதீகவியல்.

நாம் எப்படி ஒளியை மிஞ்சிய வேகத்தில் பயணம் செய்தால் காலப்பயணம் சாத்தியம் என்கிறோமோ அதே போன்றே பேரண்டத்தில் காணப்படும் கருந்துளைகளும் காலப்பயணத்தை சாத்தியமாக்கலாம் என்கிறது பௌதீகம் .அப்படி நேரத்தை கடந்து செல்லும் ஒருவரின் வயது மாறாமல் அதே நிலையில் இருக்கும் காரணம் அவர்தான் நேரத்தை கடந்து விட்டாரே ? காணமல் போன மலேசியாவின் MH370 கூட கருந்துளைகளை கடந்து சென்றிருக்கலாம் என்ற ஒரு அனுமானம் இன்றளவும் உள்ளது.

ஒரு வேலை காலப்பயணம் சாத்தியப்படுகிறது என்றால் முதலில் நமக்கு தோன்றுவது கடந்த காலங்களில் எம்முடைய வாழ்வில் நாம் விட்ட பிழைகளினூடாக நமது நிகழ் காலத்தை பாதித்த விடயங்கள் . அவற்றை கால இயந்திரம் அல்லது காலக் கடிகாரத்தினூடாக சென்று திருத்துவது . உதாரணமாக பலர் நாம் நன்றாக படித்திருந்தால் இன்று நல்ல நிலையில் இருக்கலாம் கஷ்டமான தொழில் செய்ய வேண்டியதில்லை அவருடைய பழைய அனுபவங்களினூடாக நன்றாக படிக்குமாறு தமது பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்வதை கேட்கலாம், பலர் வாய்ப்பை நழுவவிட்டு அதையே காலம் முழுவதும் சொல்லித்திரிவதையும் பார்க்கலாம்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் கடந்த காலங்களில் விட்ட தவறுகளையும் தவறவிட்ட வாய்ப்புக்ககளையும் நினைத்து வருந்துவதுண்டு.

அப்படியான நிலையில் நாங்கள் இல்லை எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நாங்கள் பிழை விடுவதில்லை என்று சொல்வீர்களானால் நீங்கள் நாட வேண்டியது நல்ல வைத்தியரை .

அதேபோல் எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு விபத்தை அல்லது அவருக்கு வரவிருக்கும் நோயை காலப்பயணம் செய்து அறிந்துகொள்வாறேயானால் இன்றே அதற்க்கான முன் ஏற்பாடுகளை தன்னுடைய அனுபவம் தனக்கு கிடைத்த அறிவினூடக செய்துகொள்வார்.

நேரத்தை உறைய வைக்கலாம் என்றால் அது மேற்சொன்ன எல்லாவற்றையும் விட சிறந்தது என்பார் , ஏன் என்றால் அவருக்கு வயது போகாமல் சாகா வரத்தை அடைந்து விடுவார் .
மேற்சொன்ன காரணங்களாலோ என்னவோ பலருக்கும் காலப்பயனத்தின் மீது ஒரு ஆசை. இதனாலோ என்னவோ இது தொடர்பாக வரும் கதைகள் , திரைப்படங்கள் அதிகம் பிரசித்தம் .

சாத்தியமாகிறதோ இல்லையோ மேற் சொன்னவை எல்லாம் ரொம்ப சிக்கலான விடயங்கள் பல முரண்பட்ட கோட்பாடுகளை கொண்டவைகள் அதையும் தாண்டி எல்லாவற்றையும் சரி செய்து ஒரு காலப்பயண இயந்திரமோ கடிகாரோமோ செய்வதென்றாலும் ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற நிலைக்கு வந்து விடுவோம் என்பதால் அவற்றை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு நேரடியாக நமது விடயத்திற்கு வருவோம் .தற்காலத்தில் அதற்கான இயந்திரங்களோ , கடிகாரமோ அல்லது எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் நாம் எப்படி போய் எமது தவறுகளை திருத்திக்கொள்வது என்று கேட்டால் ஒரு முஸ்லிமுக்கு அந்த வாய்ப்பு சற்று அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது

சிரமமான சூழ்நிலைகளில் அங்கத் தூய்மையை (உளூ) முழுமையாகச் செய்தால் முந்தைய சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்
அஹ்மத் 22467

ஒவ்வொரு நாளும் நமது உளூவின் ஊடக முந்தைய பாவங்களை அல்லாஹ் அழிக்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்கள் .

உளூ செய்து முடித்து ஜமாத்தாக தொழும் போதும் மீண்டும் முன் சென்ற பாவங்கள் அழிக்கப்படுகின்றன

தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
புகாரி 780

ஒவ்வொரு நாளும் இதுபோன்று பின்னோக்கி சென்று நாம் அறிந்தோ அறியாமலோ விட்ட பிழைகளை அழிக்கும் வாய்ப்பை அல்லாஹ் தந்திருக்கிறான் என்றால் எம்மை அறியமால் காலப்பயணம் செய்கிறோம் என்பதை நாம் சிந்திதுள்ளோமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) உளூ செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை.
முஸ்லிம் 385

இன்னும் அடுத்து வர இருக்கும் தொழுகைக்கு இடையிலான பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன என்றால் அவர் காலத்தை முன்னோக்கிச் சென்று எதிர்கால பாவங்களையும் அழித்துகொள்ளும் வாய்ப்பை அல்லாஹ் வழங்கியுள்ளான். .
ஒருவர் திட்டமிட்டு காலப்பயணம் செய்து தனது பிழைகளை திருத்திக் கொள்வாராயின் அது அவருடைய அனுபவம் அல்லது அவருடைய அறிவுக்கு உட்பட்டது .சில வேலை அவர்விட்ட பிழை அவருடைய அனுபவம் அல்லது அவருடைய அறிவுக்கு எட்டதாக இருந்தால் என்ன செய்வார் ?

இது தொடர்பாக வரும் செய்திகளை கூர்ந்து கவனித்தால் அல்லாஹ்வின் தூதர் பொதுவாகவே பாவங்கள் மன்னிக்கபடுவதாகவே கூறியுள்ளார்கள் . ஆக ஒரு மனிதர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன .
அதாவது அவரது அறிவையும் தாண்டி அவர் செய்த பிழைகளை அளவற்ற அருளாளன் மன்னிக்கின்றான்.

ஒவ்வரு வாரமும் ஜூம்மா தொழுவதால் நமக்கு காலப்பயணம் செய்யக் கிடைப்பதாக ஒரு ஹதீஸ் முஸ்லிமில் வருகிறது, அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்கள்
“ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மௌனமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன” .

நூல் : முஸ்லிம் 1556

ஒரு ஜூம்மாவை தொடர்ந்து அடுத்த பத்து நாள் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

நம்மிடம் ஒரு காலப்பயணம் செய்யும் இயந்திரம் இல்லாவிடினும் அதற்க்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் கிடைக்கும் போது சரியான முறையில் அந்த அமல்களை செய்தால் காலப்பயணம் சாத்தியமே !

ஒரே நேரத்தில் இருவழிப்பயணம் சாத்தியமா என்று கேட்டால் ஒரே அமலில் சந்தர்ப்பத்தை தட்டிச்செல்லும் வாய்ப்பு பின்வரும் அமல்களின் மூலம் அடைந்து கொள்ளலாம் .

அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, “முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப்பரிகாரமாக அமையும்” என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு “அது கடந்த ஆண்டின் பாவப் பரிகாரமாகும்” என்றார்கள்.
நூல் : முஸ்லிம் 215

மேற்கண்ட நோன்புகளை போன்றே நமக்கு மிக நெருக்கமாக உள்ள ரமழானும் இது போன்ற அரிய வாய்ப்புக்களை நமக்கு அள்ளிக்கொண்டு வர இருக்கிறது . இன்ஷா அல்லாஹ் இந்த ரமழானை நாம் அடைவோமானால் நிச்சயம் ஒரு காலப்பயணத்தை மேற்கொள்ளலாம் என்பது கீழ்வரும் ஹதீஸ் மூலம் உறுதியாகின்றது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் “லைலத்துல் கத்ர்’ இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

நூல்: புகாரி 1901

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவோருக்கு கிடைக்கும் மிக அருமையான சந்தர்ப்பம் தான் தன் வாழ்நாளில் செய்த அணைத்து பாவங்களையும் அழித்துக்கொள்ளும் சந்தர்ப்பம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.

நூல் : புகாரி (1521)

ஆக ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒருவர் தன்னுடைய குழந்தை நிலைக்கே சென்று ஒரு பாவமும் அற்றவராக மாறுகிறார் .மொத்தத்தில் நாம் பார்த்த ஹதீஸ்களினூடாக நாம் காலப்பயணம் செய்து எமது கடந்த கால மற்றும் வருங்கால பாவங்களை அழித்துக்கொள்ளலாம் என்பது எமக்கு உறுதியாக தெரிகின்றது .

நேரத்தை உறைய வைப்பது சாத்தியமா , சாகா வரம் பெறுதல் சாத்தியமா என்று நாம் ஏற்கனவே பார்த்த அடிப்படையில் நேரத்தை கடந்து பிரயாணம் செய்தால் அவருடைய வயது மாறா நிலையில் இளைமையாக எப்போதும் இருக்கலாம். இதை இஸ்லாமும் சாத்தியம் என்கிறது, எப்படி ?

அல்லாஹ் தன் திருமறையில் சுவர்க்க நரகம் பற்றிக்கூறும் போது

நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே பரிசுத்தமாக வாழ்ந்தோரின் கூலி.

(திருக்குர் ஆன் 20:76)

‘நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்கு வீர்கள்.’ (என்று கூறப்படும்) பெருமையடித் தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது

(திருக்குர் ஆன் 16:29)

என்றும் கூறுகிறான். மொத்தத்தில் ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது போல் மேலுள்ள ஹதீஸ்களை சரிவர நடைமுறைப்படுத்தினால் காலப்பயணம் செய்து பாவத்தை அழித்து நன்மையை பெற்றுக்கொள்வது மட்டுமல்லாது அல்லாஹ் கூறும் சுவர்க்கத்தை அடையலாம் எனவும், நடைமுறைப்படுத்த தவறும் பட்ச்சத்தில் நிரந்தர நரகத்தை அடைந்து வேதனை அனுபவிக்க வேண்டி வரும் என்பதையும் உணர முடிகின்றது.

இன்னும் இது போன்ற சந்தர்பங்களை நழுவ விட்டு விட்டு நடைமுறைச் சிக்கலான இயந்திரங்களை கோட்பாடுகளை கற்பனை செய்து கொண்டு இருப்போமானால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றான் (திருக்குர் ஆன் 103:1,2) இல் மனிதன் நஷ்டத்தில் இருப்பதாக!!